சுத்தம் சோறு போடும்

சுத்தம் சோறு போடும்

 

cleanliness is next to godliness

சுத்தம் சோறு போடும்

பாபு என்ற சிறுவன் ஐந்தாவது படித்து வந்தான். புத்தக மூட்டையுடன் பள்ளிக்குப் புறப்பட்டான்.

ஏண்டா இன்னைக்கு குளிச்சியா என்றாள் பாபுவின் அம்மா. நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஓடினான். பல நாட்கள் பாபு பல் விளக்காமலே பள்ளிக்குப் போவான்.

மாணவர்கள் இவனிடம் கேட்டால், யானை பல் விளக்குகிறதா என்று கிண்டலாகப் பதில் சொல்வான். வகுப்பில் பாபுதான் முதல் மாணவன். பாபுவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.

வகுப்பிற்குள் நுழைந்த ஆசிரியர் பாபுவிடம் ஏன் அழுக்கு சட்டையுடன் வந்திருக்கிறாய் என்று கேட்டார். மறந்திட்டேன் சார் என்றான் பாபு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய பாபு தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. அதனால் மாணவர்கள் இவனை அழுக்குமாமா என்று அழைத்தனர்.

பாபுவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது.

அரையாண்டுத் தேர்வு வந்தது. பாபு முதல் மார்க் வாங்க வேண்டுமென்று விழுந்து விழுந்து படித்தான். பரிட்சைக்கு இரண்டு நாள் இருந்தது. அப்போது பாபுவுக்கு திடீரென்று பல் வலி வந்தது. பாபுவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரியாகவில்லை. விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. பாபு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை.

பின்பு, பாபுவை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பாபு அரையாண்டுத் தேர்வுக்கு போக முடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான்.

தினந்தோறும் பற்களை சுத்தம் செய்திருந்தால் பல்வலியே வந்திருக்காது என்றார் டாக்டர். பாபு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. முதல் மார்க் ராஜா என்று ஆசிரியர் படித்தபோது பாபு தேம்பி அழுதான்.

ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார். சுவற்றை வைத்து தான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்றார். பாபு மௌனமாக இருந்தான்.

அடுத்தநாள் அவன் பள்ளிக்கு பளிச் என்று வந்தான். அழுக்கு மாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா என்று ஒருவன் சொல்ல அனைவரும் சிரித்தனர். பாபுவுக்கும் சிரிப்பு வந்தது.

கருத்து: சுத்தம் சோறு போடும்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain