சவரத் தொழிலாளி

சவரத் தொழிலாளி

 

Shaving worker

சவரத் தொழிலாளி

அரசர்கள் அன்றைய காலத்தில் பொது மக்களைப் பற்றி அறிந்து கொள்ள பல முயற்சிகளில் ஈடுபட்டனர். ஒவ்வொருவரும் ஒரு முறையைப் பின் பற்றி மக்களைப் பற்றி அறிந்தனர். இரவில் மாறுவேடம் அணிந்து நகர்வலம் வருதல், மாறுவேடம் அணிந்து மக்களோடு மக்களாகப் பழகுதல், சிலரை அழைத்து கருத்து கேட்பது என்று பல முயற்சிகளில் ஈடுபட்டனர்.

ஒருமுறை அரசர் ஒருவர் சவரம் செய்து கொண்டார். சவரத் தொழிலாளி அவருக்குச் சவரம் செய்தபோது, தன் நாட்டு மக்களின் நிலை குறித்து சவரத் தொழிலாளியின் கருத்தைக் கேட்டார். எனது குடிமக்கள் அனைவரும் வளமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளார்களா? என்று வினவினார் அரசர்.

ஆமாம் மகராஜா என்று பதில் சொன்னான் சவரத் தொழிலாளி. நம் நாட்டில் மிகவும் வறிய ஏழைகள் கூட எலுமிச்சை அளவு தங்கம் வைத்திருக்கிறார்கள் என்றும் சவரத் தொழிலாளி கூறினான்.

அரசர் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார். சவரத்தை முடித்துத் தொழிலாளி சென்றதும், தனது மூத்த, மதியூக மந்திரியை அழைத்தார் அரசர். நமது நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆக, நான் ஒரு நல்ல ராஜா…! அரசர் பெருமிதத்தோடு தெரிவித்துக் கொண்டார். அரசர் எப்படி அவ்வாறு நம்புகிறார் என்பதை ஆராய்ந்து அறிந்த அமைச்சர் மக்களின் நிலை குறித்த கருத்தை நம்பவில்லை.

ஒருநாள் அமைச்சர், சவரத் தொழிலாளி இல்லாத நேரத்தில் அவனது வீட்டுக்குள் புகுந்துவிட்டார். அங்கே ஒரு பையில் எலுமிச்சை அளவில் ஒரு தங்க உருண்டை இருப்பதை அமைச்சர் கண்டார். சவரத் தொழிலாளி அப்படிக் கூறியதற்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் அமைச்சர்.

பின்னர் அவர் அந்த தங்க உருண்டையை எடுத்துக்கொண்டு சத்தம் போடாமல் அரண்மனைக்குத் திரும்பிவிட்டார். அரசரிடம் தான் செய்ததைக் கூறி, சவரத் தொழிலாளியிடம், மறுநாள், முன்பு கேட்ட கேள்வியையே கேட்குமாறும், அவன் தனது கருத்தை மாற்றிக் கொண்டிருப்பான் என்றும் அமைச்சர் கூறினார்.

அடுத்த நாள் தொலைந்த தங்கத்தைத் தேடி அலுத்துக் களைத்துப் போயிருந்த சவரத் தொழிலாளி தாமதமாக அரண்மனைக்கு வந்தான். அவன் வாடிப்போன முகத்தோடு அரசருக்குச் சவரம் செய்யத் தொடங்கினான்.

குடிமக்களின் நிலை எப்படி இருக்கிறது என்று முந்திய நாள் கேட்ட கேள்வியையே மறுபடி கேட்டார் அரசர். மகாராஜா, எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று கூற முடியாது.

சிலர் மன அமைதியின்றி கவலையால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றான் சவரத் தொழிலாளி. உடனே அரசர், ஒவ்வொரு மனிதனும் தனது சூழ்நிலையின் அடிப்படையிலேயே உலகத்தைப் பற்றிக் கணிக்கிறான் என்பதை அரசர் உணர்ந்தார். அந்த உண்மையை உணர வைத்த அமைச்சருக்கு அரசர் உரிய பரிசளித்துக் கவுரவித்தான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain