காஸ் சிலிண்டர் விபத்துக்கும் Insurance பெறலாம். Claim பெறுவது எப்படி?

காஸ் சிலிண்டர் விபத்துக்கும் Insurance பெறலாம். Claim பெறுவது எப்படி?

 

You can also get insurance for a gas cylinder accident. How to get a claim?

நாம் தினமும் சமையல் செய்ய பயன்படுத்தும் LPG Gas சிலிண்டருக்கு காப்பீடு உண்டு.

இந்த LPG சிலிண்டருக்கான காப்பீடானது நாம் டீலரிடம் எரிவாயு இணைப்பு பெறும்போது சேர்ந்து வந்துவிடும். நம் நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், சமையல் எரிவாயுக்கான தேவையும் அதிகமாகவே உள்ளது.

கோடிக் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு காஸ் இணைப்பைத் தந்து அவற்றை சரியாகப் பராமரிப்பது அனைத்து நிறுவனங்களுக்கும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது. இதில் ஒரு சிறிய தவறு ஏற்பட்டால்கூட விபத்து ஏற்பட்டுவிடும்.

காஸ் சிலிண்டருக்கான இன்ஷூரன்ஸை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் எடுக்கத் தேவையில்லை. அதை சிலிண்டர் டிஸ்ட்ரிபியூட்டரே எடுத்துவிடுவார். அரசு விதிமுறைகளின்படி, காஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் தங்கள் கொடுக்கும் காஸ் இணைப்புக்கு கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்துக்கு Public liability policy என்று பெயர். இந்த பாலிசியின்படி, இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து எண்ணெய் நிறுவனங்கள் பெறக்கூடாது. பிரீமியம் செலவுகள் அனைத்தும் நிறுவனத்தையே சேரும்.

காப்பீட்டுத் தொகை

LPG சிலிண்டர் இன்ஷூரன்ஸ் பாலிசியின் மூலம் ஒரு விபத்துக்கு ரூ.50 லட்சமும், ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் வரையும் இழப்பீட்டைப் பெறலாம். ஒருவேளை, விபத்தால் மரணம் ஏற்பட்டால், இறந்த ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.5 லட்சம் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து வழங்கப்படும். இதைத் தவிர, மருத்துவக் காப்பீடாக ஒரு விபத்துக்கு ரூ.15 லட்சம் வரை பெற முடியும்.

விபத்திற்குப் பின் உடனடி நிவாரணமாக ஒரு நபருக்கு 25,000 ரூபாய் வரை வழங்கப்படும். விபத்தால் ஏற்படும் சொத்து சேதாரத்துக்காக ஒரு விபத்துக்கு ரூ.1 லட்சம் ரூபாய் வரை பெறலாம்".

எப்படி Claim செய்வது?

இதைப் பொறுத்தவரை, நீங்கள் இணைப்பு வைத்திருக்கும் எண்ணெய் நிறுவனம் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ், விநியோகஸ்தர் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் என இரண்டு இன்ஷூரன்ஸ் இருக்கும். இதில் சிலிண்டரில் விபத்து ஏதும் ஏற்பட்டால் அதை உடனடியாக (30 நிமிடங்களுக்குள்) விநியோகஸ்தருக்குத் தெரிவிக்க வேண்டும்.

அவர் விபத்தை நேரில் ஆய்வு செய்து, அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிப்பார். க்ளெய்ம் விண்ணப்பத்தையும் தருவார். காவல் துறைக்கு அந்த விபத்தைத் தெரிக்க வேண்டுமெனில், அதையும் நீங்கள் செய்ய வேண்டும். இன்ஷூரன்ஸ் அதிகாரி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து உங்களின் க்ளெய்ம் தொகையை நிர்ணயிப்பார். இதில் சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் முகவரி, நபரின் பெயர் ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.

காஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரத் காலதாமதமானால், விபத்து ஏற்பட்டு பொருள்கள் சேதம் அடைந்தற்கான ஆதாரத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். தரை சேதம் அடைந்திருந்தால் அதை, காஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரும்வரை அப்படியே வைத்திருக்கலாம் அல்லது அதைச் சரிசெய்ததற்கான ரசீதை வைத்திருக்க வேண்டும்.

வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஒன்றிரண்டு தெரு தாண்டி வீட்டை மாற்றினால்கூட, பலசமயங்களில் காஸ் டிஸ்ட்ரிபியூட்டருக்குத் தெரிவிப்பதில்லை. இது தவறு. இதுபோன்ற சமயங்களில் விபத்து ஏற்பட்டால், உங்களுக்கான க்ளெய்ம் நிராகரிக்கப்பட நிறையவே வாய்ப்புகள் உள்ளன. சிலிண்டர் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, இவ்வளவு தொகைக்குதான் க்ளெய்ம் என எந்தவிதமான வரைமுறையும் கிடையாது. விபத்தின் தன்மையைப் பொறுத்தும், அதன் பாதிப்பைப் பொறுத்தும் க்ளெய்ம் தொகை வித்தியாசப்படும்.

பராமரிப்பு முக்கியம்

காஸ் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பாரத் காஸ் நிறுவனத்தின் காஸ் மெக்கானிக் ரமேஷிடம் பேசினோம். ``காஸ் சிலிண்டர் டிஸ்ட்ரிபியூட்டரால் அங்கீகரிக்கப்பட்ட காஸ் மெக்கானிக் மூலமாக இரண்டு வருடத்துக்கு ஒருமுறை சிலிண்டர், இணைப்புக் குழாய், ரெகுலேட்டர், அடுப்பு ஆகியவை சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இதற்கு 75 ரூபாய் கட்டணம் உண்டு. அத்துடன் மெக்கானிக் மாற்றச் சொல்லும் பொருள்களை உடனடியாக மாற்றுவது முக்கியம். இதற்குத் தனியாகச் செலவாகும். இணைப்புக் குழாய் சுமார் 170 ரூபாயும், ரெகுலேட்டர் சுமார் 250 ரூபாயும் ஆகும். அரசால் .எஸ். முத்திரை அளிக்கப்பட்ட நிறுவனத்தின் பொருள்களையே பயன்படுத்த வேண்டும்.

அதிகபட்சம் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை இணைப்புக் குழாயை கட்டாயமாக மாற்ற வேண்டும். பச்சை கலர் இணைப்புக் குழாயைப் பயன்படுத்தக் கூடாது. இதைப் பயன்படுத்தும்போது அதிக அளவு விபத்துகள் ஏற்படுகிறது. இவை அனைத்துக்கும் ரசீது வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். ஏனெனில், விபத்து ஏற்பட்டு க்ளெய்ம் செய்யும் சமயங்களில் இந்த ரசீது கட்டாயம் தேவை.

அதேபோல, காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால் அடுப்பு, ரெகுலேட்டர் ஆகியவற்றை அணைத்துவிட்டு, உடனடியாக உங்களின் விநியோகஸ்தருக்கு தெரிவிப்பது அவசியம். அவர் வந்து சரிசெய்து தந்தபின் மீண்டும் அடுப்பைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இதைச் சரியாகச் செய்யாமல் விபத்து ஏற்பட்டால், க்ளெய்ம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்".

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain